Saturday 11 May 2013

தேசிய கட்சியின் மாநில செயலாளர் வருகை



தேசிய கட்சியின் மாநில செயலாளர் வருகை

              கோயம்புத்துார் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு.பி.ஆர்.நடராசன் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “மார்க்சிஸ்ட் கம்யுானிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு.ஜி.ராமகிருஷ்ணன் அய்யா அவர்கள் உங்கள் பள்ளியைப் பார்வையிட வருகை தருவதாகக் கூறியுள்ளார்” எனக்கூறினார்கள்.
            சுமார் ஒருவாரகால இடைவெளியில் மதிப்பிற்குரிய திரு.ஜி.ராமகிருஷ்ணன் அய்யா அவர்கள் தொடர்பு கொண்டு பள்ளியின் இருப்பிடம் குறித்தத் தகவல்களைக் கேட்டறிந்து, 20.03.2013 ஆம் நாள் பள்ளிக்கு வருகைபுரிந்தார்கள்.

திரு.ஜி.இராமகிருஷ்ணன் அவர்களை வரவேற்கும் கிராமக்கல்விக் குழு தலைவர் திரு.மகேஷ்.
பள்ளி குறித்த விளக்கங்களை அறிந்து கொள்ளும் திரு.ஜி.ஆர் அவர்கள்.

        பள்ளியின் வளர்ச்சி நிலைகள் குறித்தும், மாணவர்கள் கல்வி தரம் உட்பட பல்வேறு விளக்கங்களைக் கேட்டறிந்தார்கள். தலைமையாசிரியை, கிராமக்கல்விக் குழு  தலைவர், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்றார்.
          சுமார் ஒரு மணிநேரத்திற்கும் கூடுதலாக பள்ளியில் இருந்தவர், இறுதியாக இரண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

 மாணவி வி.வினிதாவுடன் உரையாடுகிறார்.
 
முதலாவதாது கருத்தை ஒரு சிறுகதையின் மூலம் கூறினார்,
               “சமீபத்தில் சிறுகதை ஒன்றினைப் படித்தேன். மதுரையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருந்த அந்த சிறுகதையில், ஒரு ஏழை விதவைத்தாயின் ஒரே மகன் பள்ளியில் படித்து வருகிறான். அப்பள்ளியில் ஆண்டுதோரும் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வார்கள். இவ்வாண்டு மதுரையைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிய அவ்வகுப்பு ஆசிரியர், பயணக்கட்டணமாக ரூ.100 கொடுக்க வேண்டும் என்று கூறியவர் திங்கள் கிழமை வரும்போது உங்கள் பெற்றோரிடம் கேட்டு வாருங்கள்.முதலில் பெயரைக் கொடுத்து விடுங்கள். ஒரு வாரத்திற்குள் பணம் கொடுத்தால் போதும் என்று கூறுகிறார். அம்மாணவனுக்கும் ஆவல் ஏற்பட்டு தன் தாயிடன் கேட்டான். குழந்தையின் விருப்பத்தினை அறிந்த அந்த ஏழைத்தாய் உன் பெயரையும் கொடுத்துவிடு அடுத்தவாரத்திற்குள்ளாக நாம் பணத்தினைக் கட்டிவிடலாம் என்று கூறுகிறாள். அம்மாணவனும் தனது பெயரையும் பதிவு செய்து மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தான். இரண்டு நாள்களுக்குப்பின் அவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் வழியிலுள்ள செங்கல் சுாளையைத்தாண்டி வந்து கொண்டிருக்கையில், நடக்க முடியாதபடி ஆடைகள்,உடல் என அனைத்தின் மீதும் செம்மண்படிந்த நிலையில் ஒருவர் தள்ளாடிச் செல்வதைப் பார்க்கிறான் அச்சிறுவன். தன் அம்மாவைப் போன்றதொரு சாயலாகத் தெரிந்ததால் சற்று அருகில் செல்கிறான். தன் அம்மாவேதான் என்பதை உறுதி செய்து கொண்ட அச்சிறுவன்,அருகிலிருந்த மரத்தின் மறைவில் நிற்று தன் அம்மா எப்படி கஷ்டப்படுகிறாள் என்பதைப் பார்த்து கண்ணீர் சிந்துகிறான். தன் அம்மா தன்னை கவனிக்காதவாறு வீட்டிற்குச் சென்றுவிட்டான். அந்த வார இறுதியில் அவன் தாய் பெற்று வந்த கூலிப்பணத்திலிருந்து ரூ.100 எடுத்து அச்சிறுவனிடன் மிக மகிழ்ச்சியுடன் கொடுத்தாள்.அச்சிறுவனோ பணத்தை வாங்க மறுத்து எனக்கு வேண்டாம் என்றான்.தாயுக்கோ மிகுந்த கவலை. ஏன் வாங்க மறுக்கிறாய்? என மீண்டும் மீண்டும் கேட்க இறுதியில் அச்சிறுவன் உங்கள் வேலையின் சிரமத்தை நான் அறிந்து கொண்டேன் என நடந்தவற்றினைத் தன் தாயிடன் கூறுகிறான். அவனைக்கட்டி அணைத்த தாய் கண்ணீர் சிந்துகிறாள்”
             பொதுவாக இதுபோன்று ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளே அரசு பள்ளிகளுக்கு வருகின்றனர். ஏழை மக்களின் தரம் உயர உங்களைப் போன்ற ஆசிரியர்களின் பங்களிப்பே முக்கியமானதாக விளங்குகின்றன. அந்த வகையில் உங்கள் பணி தொடரட்டும்.

ஆசிரியர்களிடம் தனது கருத்தினைப் பகிர்ந்து கொள்கிறார் திரு.ஜி.ஆர் அவர்கள்.
 
இரண்டாவது,  
              பொதுவாக பெரும்பாலானோர் பணியினை நேசித்துப் பணியாற்றுகின்றனர். ஆனால், குடும்பத்தை முதன்மைப்படுத்தி அடுத்ததாகவே பணியினைக் கருதுவர். ஒரு சிலர் பணியினை முதன்மைப்படுத்தி, குடும்பத்தை அடுத்ததாகக் கருதுவர். உங்கள் பணி இரண்டாவதைப் போன்றது, என்று கூறி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
திரு.ஜி.இராமகிருஷ்ணன் அவர்களுடன் குழந்தைகள்.
         மதிப்பிற்குரிய ஜி.ராமகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கு எம் பள்ளி, கிராமக்கல்விக்குழு மற்றும் இராமம்பாளையம் ஊர் பொது மக்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

தனது கருத்தைப் பதிவு செய்கிறார் திரு.ஜி.ஆர் அவர்கள்.
 

பதிவு : பிராங்கிளின்.

முதன்மைக் கல்வி அலுவலர் போட்ட V.Good.


முதன்மைக் கல்வி அலுவலர் போட்ட V.Good.

04.01.2013 ஆம் நாள் காலை வழக்கமான பள்ளியின் காலை வழிபாட்டினை முடித்து மாணவர்கள் அவரவர் வகுப்புகளில்  பாடம்பயின்று கொண்டிருந்தனர்.
     பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த ஜீப்பிலிருந்து எங்கள் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.து.கணேஷ்மூர்த்தி அவர்களும், கோவை கல்வி மாட்டத்தின் மாவட்டக்கல்வி அலுவலர் திரு.ரா.பாலமுரளி அவர்களும் இறங்குவதற்குள், மற்றொரு ஜீப்பும் வந்துநின்றது. அதிலிருந்து கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.அ.ஞானகவுரி அவர்களும், கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.ர.திருவளர்ச்செல்வி அவர்களும் இறங்கி வகுப்பறைக்குள் நுழைந்தனர். இவர்களுடன் காரமடை ஒன்றியத்தின் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.குருசாமி அவர்களும் இணைந்திருந்தார்.
     கோவை மாவட்டத்தின் தொடக்க, பள்ளிக்கல்வித்துறைகளின் உயர் அதிகாரிகள் அனைவரும் ஒரே நேரத்திரல் எங்கள் பள்ளிக்கு வருகை புரிந்திருந்தனர்.
     கல்வி அதிகாரிகள் பள்ளி குறித்த தகவல்களைக் கேட்டறிந்தனர். பின்பு, கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் சென்று வாய்பாடுகளைக் கேட்டார். கேட்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் சரியாகச் சொல்லிப் பாராட்டைப் பெற்றனர்.
     அடுத்து முதல் வகுப்பிற்குச் சென்ற கல்வி அதிகாரிகள், ஒன்றாம் வகுப்பில் ஒரே மேசையில் அமர்ந்திருந்த மூன்று மாணாக்கரிடம் சென்று உங்களின் பெயரைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுங்கள் என்றார்.
     அதில், சிலேட்டினை அருகிலேயே வைத்திருந்த மு.ராகவி மற்றும் ச.தாரணி ஆகிய மாணவிகள் தங்களின் பெயர்களைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதிக்காட்டினர். இதில், தமிழில் பெயர் எழுதிய போது முதல் எழுத்தை (Initial) ஆங்கிலத்தில் எழுதியிருந்தனர். முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தமிழில் பெயர் எழுதும் போது, முதல் எழுத்தையும் தமிழில் எழுதவேண்டும் எனக்கூறினார். M.ராகவி என்று எழுதிய மாணவி மு.ராகவி என்று உடனே திருத்தி எழுதி முதன்மைக்கல்வி அலுவலரிடம் காட்டி V.GOOD வாங்கினாள். அவர், “உன் அம்மாவிடம் போய் இதைக் காட்டு” என்றவுடன் மகிழ்வுடன் தலையாட்டிய மாணவி மிக கவனமாக தன் புத்தகப்பையில் சிலேட்டினை வைத்துக்கொண்டாள்.
     இதன் பிறகு, கல்வி அதிகாரிகள் சமையலறை, கழிப்பறை மற்றும் பள்ளியின் சுற்றுப்புறங்களைப் பார்வையிட்டனர்.
     கல்வி அதிகாரிகள் பள்ளியைப்பார்வையிட்டுத் திரும்புகையில் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.அ.ஞானகவுரி அம்மா அவர்கள் என்னை அருகில் அழைத்தார். தம்பி உங்க பெயர் என்ன? என்றார். என் பெயரைக்கூறியவுடன்,  “ரொம்ப நல்லா வேலை செய்யறீங்க தம்பி. இதே வேகமும், ஈடுபாடும் உங்கள் பணிக்காலம் முழுவதும் இப்படியே தொடர்ந்து நீடிக்க வாழ்த்துக்கள் தம்பி” என்றார்கள்.
     கல்வி அதிகாரிகளின் வருகையால் புத்துணர்வும், வேகமும் கூடியுள்ள அதே நேரத்தில், தமிழில் பெயர் எழுதும் போது முதல் எழுத்தையும் தமிழிலேயே எழுத முதல் வகுப்பிலிருந்தே பயிற்சியளிக்க வேண்டும் என்று கவனிக்கப்படாமல் இருந்த கவனிக்கப்பட வேண்டிய இதுபோன்ற பகுதிகளின் பட்டியலினைத் தயார் செய்ய வேண்டிய அவசியத்தினை தலைமையாசிரியை அவர்களும், நானும் உணர்ந்து கொண்டோம்.
     கல்வி அதிகாரிகளின் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் எங்களது தனிப்பட்ட முயற்சிகளால் மட்டுமே கிட்டவில்லை. எங்கள் கிராம மக்களின் ஆதரவாலும், ஒத்துழைப்பாலும், ஆதரவு கரம் நீட்டும் நன்கொடையாள நண்பர்களாலும், எங்களை வழிநடத்தும் அரசின் கல்வித்துறை அதிகாரிகளாலும் மட்டுமே இவைகள் சாத்தியமாக்கப்படுகின்றன.
பதிவு : பிராங்கிளின்.

2012 ஆம் ஆண்டில் தமிழகத்தின் சிறந்த அரசுப்பள்ளி



“ 2012 ஆம் ஆண்டில் தமிழகத்தின் சிறந்த அரசுப்பள்ளி ”

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில்

நீயா? நானா? நிகழ்ச்சியின்அங்கீகாரம்



மிக நீண்ட சமூகப்பயணத்தில் அவ்வப்போது கிடைக்கின்ற ஆறுதல் வார்த்தைகளும், ஆதரவுக்கரங்களின் தட்டிக்கொடுக்கும் மனப்பான்மைகளுமே சோர்வுகளையும், இழப்புகளையும், கவலைகளையும் நீக்கிப் புத்துணர்வுடன் பயணித்து மலைபோன்ற தடைகளையும் மிக எளிதாகக் கடந்து தொலைநோக்குப்பார்வையிலான சிந்தைகளை முன்னெடுத்துச் செல்லும் துாண்டுகோல்களாக விளங்குகின்றன.
     நாம் பணியாற்றும் காலத்தில் மாணவர்களுக்கும், பணியாற்றும் பள்ளிக்கும், அக்கிராமத்திற்கும், கிராம மக்களுக்கும் நம்மால் இயன்ற அளவு ஏதாவது ஒன்றினை விட்டுச் செல்ல வேண்டும் என்ற உள்ளுணர்வின்  வெளிப்பாடுகளே சில மாற்றங்களைத்தேட உந்தித்தள்ளுகின்றன.
     ஒரு பள்ளி சிறக்க அப்பகுதி மக்களின் ஈடுபாடே முதன்மையானது என்பதை கிராமமக்கள் உணரும் வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும். இன்றைய கிராமப்புறப் பள்ளிகளை உருமாற்றம் அடையச் செய்ய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துவரும் நிலைகளில் அவைகள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி, நெறிப்படுத்தி, ஏழைக்குழந்தைகளின் இறுதிப்புகலிடமான அரசு பள்ளிகளை ஓங்கி உயர்த்திப்பிடிக்க கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் ஆக்கப்புார்வமான பணிகளில் ஆசிரியர்களின் சிறு சிறு முயற்சிகளும் இலக்கினை அடைய உதவிகரமாக அமைகின்றன.
     சராசரி ஆசிரியர்களாகப் பணியாற்றிவரும் நாங்கள் எங்கள் பணிக்காலத்தில் சிலமாற்றங்களுடன் கிராமமக்களை முழுமையாகப் பயன்படுத்தி பள்ளியை மேம்படுத்த எடுத்த முயற்சிகள் நல்ல பலனைக் கொடுத்தது.
     இச்செய்திகளை பல்வேறு தின, வார, மாத பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், எழுத்தாளர்கள் எனப்பலரும் வெளியுலகிற்கு எடுத்துச்சென்றனர்.
     இதன் தொடர்நிகழ்வாக, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் நீயா?- நானா? நிகழ்ச்சியின் புதிய அறிமுகமான, “முகங்கள்” நிகழ்ச்சியில் 2012 ஆம் ஆண்டின் சிறந்த முகங்களை இணையத்தளம், மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் நேரடியாக எடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அறிமுகப்படுத்தி அங்கீகரிக்கப்பட்டது.
     அதன்படி, கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து “முகங்கள்” நிகழ்ச்சியின் முதல் அறிமுகமாக “ 2012 ஆம் ஆண்டின் தமிழகத்தின் சிறந்த அரசு பள்ளியாக ” இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி அறிமுகப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
     இவ்வங்கீகாரத்திற்குக் காரணமாக அமைந்த திரு.கோபிநாத் அவர்களுக்கும், மிகச்சரியான தளத்தில் எங்கள் பள்ளி குறித்த தகவல்களை எடுத்து முன்வைத்த தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும், எங்கள் பள்ளியை இணையத்தளத்தில் முதன்முறையாக எடுத்துச்சென்ற இணைய எழுத்தாளர் திரு.ஈரோடு கதிர் அவர்களுக்கும்,புதிய தலைமுறை யுவகிருஷ்ணா உட்பட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
     எங்கள் பள்ளி குறித்த கருத்துகளைப் பதிவு செய்த உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் இராமம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பாகவும், எங்களை வழிநடத்தும் கல்வித்துறை அதிகாரிகள் சார்பாகவும், எங்கள் பள்ளி மாணாக்கர்கள் சார்பாகவும், தலைமையாசிரியை மற்றும் உதவியாசிரியர் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
     அங்கீகாரம் என்பது தனிமனிதனுக்கோ, தனி அமைப்பிற்கோ சொந்தமானதல்ல. பிரிதொரு நாளில் பிரிதொரு“முகங்களின்” அங்கீகாரத்தில் மற்றுமொரு அரசு பள்ளியை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

                          காணொளிப் பதிவு

பதிவு : பிராங்கிளின்.