Tuesday, 1 January 2013

கல்வி அதிகாரிகளின் பார்வை

         கல்வி அதிகாரிகளின் பார்வை
 28.12.2012 ஆம் நாள் இரவு எங்கள் கோவை மாவட்டத்தின் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள், தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாளை காலை காஞ்சிபுரம் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் உங்களது பள்ளிக்கு வருகைதர உள்ளார்கள். தயாராக இருங்கள் எனத் தெரிவித்தார்.
  
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி கோவையில் நடைபெற்றது. அதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளின் கல்வி அதிகாரிகள் வருகை புரிந்து மாணவர்களைப் பாராட்டினர். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உயர்திரு.சாந்தி அவர்களும் கண்காட்சியைப் பார்வையிட்டபின், எங்கள் பள்ளிக்கு வருகைபுரிந்தார். இவருடன் எங்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உயர்திரு.து.கணேசமூர்த்தி அவர்களும் வருகை புரிந்திருந்தார்.

கோவையிலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ள நமது பள்ளிக்கு காலை 11 மணிக்கு வருகை புரிந்த கல்வி அதிகாரிகளை கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள், கிராம மக்கள், காரமடை ஒன்றிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் திரு.சோ.குருசாமி மற்றும் தலைமையாசிரியை திருமதி.என்.சரஸ்வதி ஆகியோர் வரவேற்றனர்.

கோயம்புத்துார் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.கணேசமூர்த்தி அவர்களை வரவேற்கும் கிராமக்கல்விக்குழுவினர்.
தலைமையாசிரியை அவர்களைப்பாராட்டும் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.சாந்தி அவர்கள்.
 பள்ளியின் அருகில் வசிக்கும் சில மாணவர்கள் கணிப்பொறியில் கல்வி தொடர்பான குறுந்தகடுகளை இயக்கிக்கொண்டிருந்தனர்.அவர்களிடம் சென்ற காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் சிறிது நேரம் உரையாடினார்.
         எங்கள் மாணவர்களிடம் உரையாடும் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.சாந்தி அவர்கள்.

 பின்னா் வகுப்பறையில் அமைக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டார்.

கோவை மாட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.கருணாகரன் I.A.S அவர்கள் மூலம் வழங்கப்பட்ட நிதியில் மற்றொரு வகுப்பறையின் உள்கட்டமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. அவ்வகுப்பறையையும் கல்வி அதிகாரிகள் பார்வையிட்டு, பின் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கணினி ஆய்வுக்கூடம், பள்ளியின் சுற்றுப்புறம், கழிப்பறை முதலானவற்றினையும் பார்வையிட்டனர்.
                                   

           எங்கள் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஆகாஷிடம் நுாலகப்புத்தகங்கள் தொடர்ந்து வாசிக்கிறீர்களா? என வினவினார். மாணவன் ஆகாஷ், தொடர்ந்து வாசிக்கிறோம் என்றான். அடுக்கிவைத்திருந்த புத்தகங்களைக்காட்டி இதில் நீ படித்த புத்தகம் என்ன? என்றார் கல்வி அதிகாரி.புத்தகங்களைப் பார்த்தவாறே “ பொம்மை குதிரை” புத்தகம் வாசித்தேன் என்றான் மாணவன். அதில் என்ன கதை இருந்தது எனக் கேட்ட அதிகாரியிடம், முழுக்கதையின் சுருக்கத்தைச் சொல்லி பாராட்டைப் பெற்றான் மாணவன்.

கிராம மக்களின் கூட்டு முயற்சிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உயர்திரு.சாந்தி அவர்களும், கோவை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உயர்திரு.து.கணேசமூர்த்தி அவர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்துச் சென்றனர்.

நமது பள்ளியில் அசிம் பிரேம்ஜி 
கல்வி அறக்கட்டளையினர்
    ஹலோ… வணக்கம். நான் கிருத்திகா பேசுறேன். நீங்க இராமம்பாளையம் மாஸ்டருங்களா?
ஆமாங்க வணக்கம்.நீங்க யாருனு தெருஞ்சுக்கலாமா?

     நான் புதுடில்லியிலிருந்து பேசுறேன். Azim Premji Foundation-ல work பன்றேன். உங்கள் பள்ளி பற்றி website-ல் செய்தி பார்த்தோம். மிகச்சிறப்பா இருந்துது. உங்க பள்ளியைப்பார்க்க நாங்க நேரில்வர விரும்புகிறோம். டிசம்பர் 28 வரலாமா?
நீங்கள் எங்கள் பள்ளிக்கு வருவதில் மகிழ்ச்சி.ஆனால் தற்போது இரண்டாம் பருவ விடுமுறை என்பதால் எங்க குழந்தைகள் பள்ளிக்கு வரமாட்டார்கள்.
தட்ஸ் ஓகே. ஏதாவது கொஞ்சம் பேரையாவது நேரில்சந்திக்க ஆசை.முடிந்தால் பாருங்க.
ஓகே.பார்க்கிறோம்.28-ம் தேதி எப்போ வருவீங்க மேடம்.
சரியாக மதியம் 1 மணிக்கு School- க்கு வந்துருவோம்.
ஓகே நாங்கள் தயாராக இருக்கோம்.உங்க அழைப்பிற்கு ரொம்ப நன்றிங்க மேடம்.
நன்றிங்க சார்.பை.

28.12.2012.
இரண்டாம் பருவ விடுமுறையில் வெளியுார் செல்லாமல் பள்ளியின் அருகில் வசிக்கும் சில மாணவர்களிடம் தகவல் கூறிய போது, 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிட்டுகளாய் பறந்து வந்துவிட்டார்கள்.
(மாணவர்களின் வருகையைக் குறித்து நாங்கள் என்றும் கவலைப்பட்டதில்லை.ஏனெனில்,இவர்கள் எல்லா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பள்ளிவைக்க நீண்ட நாள்களாக நச்சரிப்பவர்கள்.)
பெங்களுரு Azim Premji Foundation- ல் பணியாற்றும் திரு.ராஜ் கிஷோர் மற்றும் செல்வி.கிருத்திகா ஆகியோர் மதியம் நமது பள்ளிக்கு வருகைபுரிந்தனர்.
வரவேற்பை ஏற்றுக்கொண்டவுடன், முதலில் பள்ளிக் குழந்தைகளிடம் சென்று அவர்களிடம் பள்ளியின் நிலை குறித்தும், அவர்களின் ஆர்வம் குறித்தும் கேட்டறிந்தனர்.சிறுவர்களின் கதைகள், பாடல்கள் என நேரம் போய்க் கொண்டே இருந்தது.
திரு.ராஜ் கிஷோர் அவர்கள் குழந்தைகளுக்கு Magic கற்றுக் கொடுத்தார்.குழந்தைகள் அவரை விட்டபாடில்லை.மீண்டும் உங்களிடம் வருகிறோம் என்று கூறி, பள்ளி வளர்ச்சி குறித்த தகவல்களைக் கிராமக்கல்விக்குழுவினர் மற்றும் ஊர் பெரியவர்களிடம் பெற்றுப் பதிவு செய்தனர்.

 
 

 எங்கள் பள்ளியின் தலைமையாசிரியை மற்றும் என்னிடமும் பள்ளியின் கடந்தகால நிகழ்வுகள் முதல் தற்போதைய நிலைவரை பல தகவல்களைக் கேட்டுப் பெற்றனர்.
தமிழக அரசின் நலத்திட்டங்கள், கல்வி அதிகாரிகளின் ஒத்துழைப்புகள், கிராம மக்களின் ஆர்வத்துடனான பங்களிப்புகள், எங்களின் சிறிய முயற்சி ஆகியவற்றின் கூட்டு முயற்சியே இப்பள்ளியின் வளர்ச்சிக்குக் காரணம் என்பதை மீண்டும் ஒரு முறை பதிவு செய்தோம்.
Azim Premji Foundation மூலம் வெளியிடப்பட்டுள்ள கல்வி தொடர்பான பாடங்கள் அடங்கிய குறுந்தகடுகளை, நமது பள்ளிக் குழந்தைகளுக்கு கிருத்திகா அர்கள் வழங்கினார்.
நம் பள்ளிக் குழந்தைகளின் ஆர்வத்தின் காரணமாக, காகிதத்தில் பல்வேறு மாதிரிகளை (Craft work) திரு.ராஜ் கிஷோர் அவர்கள் கற்றுக் கொடுத்தார். குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக்கொண்டனர்.
இறுதியில் இக்குழுவினர், நாங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றிருக்கிறோம்.இதைப்போன்ற அரசு பள்ளியை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை.இதுவே முதல்முறை.நாங்கள் இப்பள்ளி குறித்து இணையத்தளத்தில் பார்த்த போது, சாதாரணமாகவே கருதினோம்.ஆனால், நேரில் பார்த்த போது நம்பவே முடியவில்லை.இந்த பணிகளை ஒருங்கிணைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் ஆச்சர்யம் அளிக்கிறது.குழந்தைகளின் ஆர்வம் எங்களை உற்சாகப்படுத்தியது.இது போன்ற பள்ளியில் படிக்க முடியவில்லை என்ற வருத்தமே ஏற்படுகிறது.இருந்தாலும் இக்கிராமத்துக் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.இன்றைய தினம் மிகமிக நல்ல சந்திப்பாக இருந்தது.வாழ்வின் நல்ல நாள்களில் இந்த நாளையும் ஒன்றாகக் கருதுகிறோம் என்றனர் நெகிழ்ச்சியுடன்.
மாலை 6.30 மணிக்கு இக்குழுவினரை அன்புடன் வழியனுப்பி வைத்தனர் இராமம்பாளையம் கிராமத்தினர்.
இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வருகைபுரிந்த Azim Premji Foundation குழுவினருக்கு நம் பள்ளி, கிராமக்கல்விக்குழு மற்றும் இராமம்பாளையம் பொதுமக்கள் சார்பாக அன்புகலந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.