Saturday, 11 May 2013

2012 ஆம் ஆண்டில் தமிழகத்தின் சிறந்த அரசுப்பள்ளி



“ 2012 ஆம் ஆண்டில் தமிழகத்தின் சிறந்த அரசுப்பள்ளி ”

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில்

நீயா? நானா? நிகழ்ச்சியின்அங்கீகாரம்



மிக நீண்ட சமூகப்பயணத்தில் அவ்வப்போது கிடைக்கின்ற ஆறுதல் வார்த்தைகளும், ஆதரவுக்கரங்களின் தட்டிக்கொடுக்கும் மனப்பான்மைகளுமே சோர்வுகளையும், இழப்புகளையும், கவலைகளையும் நீக்கிப் புத்துணர்வுடன் பயணித்து மலைபோன்ற தடைகளையும் மிக எளிதாகக் கடந்து தொலைநோக்குப்பார்வையிலான சிந்தைகளை முன்னெடுத்துச் செல்லும் துாண்டுகோல்களாக விளங்குகின்றன.
     நாம் பணியாற்றும் காலத்தில் மாணவர்களுக்கும், பணியாற்றும் பள்ளிக்கும், அக்கிராமத்திற்கும், கிராம மக்களுக்கும் நம்மால் இயன்ற அளவு ஏதாவது ஒன்றினை விட்டுச் செல்ல வேண்டும் என்ற உள்ளுணர்வின்  வெளிப்பாடுகளே சில மாற்றங்களைத்தேட உந்தித்தள்ளுகின்றன.
     ஒரு பள்ளி சிறக்க அப்பகுதி மக்களின் ஈடுபாடே முதன்மையானது என்பதை கிராமமக்கள் உணரும் வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும். இன்றைய கிராமப்புறப் பள்ளிகளை உருமாற்றம் அடையச் செய்ய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துவரும் நிலைகளில் அவைகள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி, நெறிப்படுத்தி, ஏழைக்குழந்தைகளின் இறுதிப்புகலிடமான அரசு பள்ளிகளை ஓங்கி உயர்த்திப்பிடிக்க கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் ஆக்கப்புார்வமான பணிகளில் ஆசிரியர்களின் சிறு சிறு முயற்சிகளும் இலக்கினை அடைய உதவிகரமாக அமைகின்றன.
     சராசரி ஆசிரியர்களாகப் பணியாற்றிவரும் நாங்கள் எங்கள் பணிக்காலத்தில் சிலமாற்றங்களுடன் கிராமமக்களை முழுமையாகப் பயன்படுத்தி பள்ளியை மேம்படுத்த எடுத்த முயற்சிகள் நல்ல பலனைக் கொடுத்தது.
     இச்செய்திகளை பல்வேறு தின, வார, மாத பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், எழுத்தாளர்கள் எனப்பலரும் வெளியுலகிற்கு எடுத்துச்சென்றனர்.
     இதன் தொடர்நிகழ்வாக, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் நீயா?- நானா? நிகழ்ச்சியின் புதிய அறிமுகமான, “முகங்கள்” நிகழ்ச்சியில் 2012 ஆம் ஆண்டின் சிறந்த முகங்களை இணையத்தளம், மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் நேரடியாக எடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அறிமுகப்படுத்தி அங்கீகரிக்கப்பட்டது.
     அதன்படி, கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து “முகங்கள்” நிகழ்ச்சியின் முதல் அறிமுகமாக “ 2012 ஆம் ஆண்டின் தமிழகத்தின் சிறந்த அரசு பள்ளியாக ” இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி அறிமுகப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
     இவ்வங்கீகாரத்திற்குக் காரணமாக அமைந்த திரு.கோபிநாத் அவர்களுக்கும், மிகச்சரியான தளத்தில் எங்கள் பள்ளி குறித்த தகவல்களை எடுத்து முன்வைத்த தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும், எங்கள் பள்ளியை இணையத்தளத்தில் முதன்முறையாக எடுத்துச்சென்ற இணைய எழுத்தாளர் திரு.ஈரோடு கதிர் அவர்களுக்கும்,புதிய தலைமுறை யுவகிருஷ்ணா உட்பட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
     எங்கள் பள்ளி குறித்த கருத்துகளைப் பதிவு செய்த உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் இராமம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பாகவும், எங்களை வழிநடத்தும் கல்வித்துறை அதிகாரிகள் சார்பாகவும், எங்கள் பள்ளி மாணாக்கர்கள் சார்பாகவும், தலைமையாசிரியை மற்றும் உதவியாசிரியர் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
     அங்கீகாரம் என்பது தனிமனிதனுக்கோ, தனி அமைப்பிற்கோ சொந்தமானதல்ல. பிரிதொரு நாளில் பிரிதொரு“முகங்களின்” அங்கீகாரத்தில் மற்றுமொரு அரசு பள்ளியை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

                          காணொளிப் பதிவு

பதிவு : பிராங்கிளின்.

1 comment:

  1. பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்!

    ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

    தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

    பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

    வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

    பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

    சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

    மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

    குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
    அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

    இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்.

    ReplyDelete

Note: only a member of this blog may post a comment.