இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
காரமடை ஒன்றியம், மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம்.
Friday, 10 July 2026
Saturday, 11 May 2013
தேசிய கட்சியின் மாநில செயலாளர் வருகை
தேசிய
கட்சியின் மாநில செயலாளர் வருகை
கோயம்புத்துார் பாராளுமன்ற உறுப்பினர்
மதிப்பிற்குரிய திரு.பி.ஆர்.நடராசன் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “மார்க்சிஸ்ட்
கம்யுானிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு.ஜி.ராமகிருஷ்ணன் அய்யா அவர்கள் உங்கள்
பள்ளியைப் பார்வையிட வருகை தருவதாகக் கூறியுள்ளார்” எனக்கூறினார்கள்.
சுமார் ஒருவாரகால இடைவெளியில் மதிப்பிற்குரிய
திரு.ஜி.ராமகிருஷ்ணன் அய்யா அவர்கள் தொடர்பு கொண்டு பள்ளியின் இருப்பிடம் குறித்தத்
தகவல்களைக் கேட்டறிந்து, 20.03.2013 ஆம் நாள் பள்ளிக்கு வருகைபுரிந்தார்கள்.
| திரு.ஜி.இராமகிருஷ்ணன் அவர்களை வரவேற்கும் கிராமக்கல்விக் குழு தலைவர் திரு.மகேஷ். |
| பள்ளி குறித்த விளக்கங்களை அறிந்து கொள்ளும் திரு.ஜி.ஆர் அவர்கள். |
சுமார் ஒரு மணிநேரத்திற்கும் கூடுதலாக பள்ளியில்
இருந்தவர், இறுதியாக இரண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
| மாணவி வி.வினிதாவுடன் உரையாடுகிறார். |
முதலாவதாது கருத்தை ஒரு சிறுகதையின் மூலம்
கூறினார்,
பொதுவாக இதுபோன்று ஏழ்மை நிலையில் உள்ள
குழந்தைகளே அரசு பள்ளிகளுக்கு வருகின்றனர். ஏழை மக்களின் தரம் உயர உங்களைப் போன்ற ஆசிரியர்களின்
பங்களிப்பே முக்கியமானதாக விளங்குகின்றன. அந்த வகையில் உங்கள் பணி தொடரட்டும்.
| ஆசிரியர்களிடம் தனது கருத்தினைப் பகிர்ந்து கொள்கிறார் திரு.ஜி.ஆர் அவர்கள். |
இரண்டாவது,
பொதுவாக பெரும்பாலானோர் பணியினை நேசித்துப்
பணியாற்றுகின்றனர். ஆனால், குடும்பத்தை முதன்மைப்படுத்தி அடுத்ததாகவே பணியினைக் கருதுவர்.
ஒரு சிலர் பணியினை முதன்மைப்படுத்தி, குடும்பத்தை அடுத்ததாகக் கருதுவர். உங்கள் பணி
இரண்டாவதைப் போன்றது, என்று கூறி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
| திரு.ஜி.இராமகிருஷ்ணன் அவர்களுடன் குழந்தைகள். |
மதிப்பிற்குரிய ஜி.ராமகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கு
எம் பள்ளி, கிராமக்கல்விக்குழு மற்றும் இராமம்பாளையம் ஊர் பொது மக்கள் சார்பாக நெஞ்சம்
நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
| தனது கருத்தைப் பதிவு செய்கிறார் திரு.ஜி.ஆர் அவர்கள். |
பதிவு : பிராங்கிளின்.
முதன்மைக் கல்வி அலுவலர் போட்ட V.Good.
முதன்மைக் கல்வி அலுவலர் போட்ட V.Good.
04.01.2013 ஆம் நாள் காலை வழக்கமான பள்ளியின்
காலை வழிபாட்டினை முடித்து மாணவர்கள் அவரவர் வகுப்புகளில் பாடம்பயின்று கொண்டிருந்தனர்.
பள்ளி
வளாகத்திற்குள் நுழைந்த ஜீப்பிலிருந்து எங்கள் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.து.கணேஷ்மூர்த்தி
அவர்களும், கோவை கல்வி மாட்டத்தின் மாவட்டக்கல்வி அலுவலர் திரு.ரா.பாலமுரளி அவர்களும்
இறங்குவதற்குள், மற்றொரு ஜீப்பும் வந்துநின்றது. அதிலிருந்து கோவை மாவட்ட முதன்மைக்கல்வி
அலுவலர் திருமதி.அ.ஞானகவுரி அவர்களும்,
கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.ர.திருவளர்ச்செல்வி அவர்களும் இறங்கி வகுப்பறைக்குள்
நுழைந்தனர். இவர்களுடன் காரமடை ஒன்றியத்தின் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.குருசாமி அவர்களும் இணைந்திருந்தார்.
கோவை
மாவட்டத்தின் தொடக்க, பள்ளிக்கல்வித்துறைகளின் உயர் அதிகாரிகள் அனைவரும் ஒரே நேரத்திரல்
எங்கள் பள்ளிக்கு வருகை புரிந்திருந்தனர்.
கல்வி
அதிகாரிகள் பள்ளி குறித்த தகவல்களைக் கேட்டறிந்தனர். பின்பு, கோவை மாவட்ட முதன்மைக்கல்வி
அலுவலர் அவர்கள் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் சென்று வாய்பாடுகளைக் கேட்டார். கேட்கப்பட்ட
மாணவர்கள் அனைவரும் சரியாகச் சொல்லிப் பாராட்டைப் பெற்றனர்.
அடுத்து
முதல் வகுப்பிற்குச் சென்ற கல்வி அதிகாரிகள், ஒன்றாம் வகுப்பில் ஒரே மேசையில் அமர்ந்திருந்த
மூன்று மாணாக்கரிடம் சென்று உங்களின் பெயரைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுங்கள்
என்றார்.
அதில்,
சிலேட்டினை அருகிலேயே வைத்திருந்த மு.ராகவி மற்றும் ச.தாரணி ஆகிய மாணவிகள் தங்களின்
பெயர்களைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதிக்காட்டினர். இதில், தமிழில் பெயர் எழுதிய
போது முதல் எழுத்தை (Initial) ஆங்கிலத்தில் எழுதியிருந்தனர். முதன்மைக் கல்வி அலுவலர்
அவர்கள் தமிழில் பெயர் எழுதும் போது, முதல் எழுத்தையும் தமிழில் எழுதவேண்டும் எனக்கூறினார்.
M.ராகவி என்று எழுதிய மாணவி மு.ராகவி என்று உடனே திருத்தி எழுதி முதன்மைக்கல்வி அலுவலரிடம்
காட்டி V.GOOD வாங்கினாள். அவர், “உன் அம்மாவிடம் போய் இதைக் காட்டு” என்றவுடன் மகிழ்வுடன்
தலையாட்டிய மாணவி மிக கவனமாக தன் புத்தகப்பையில் சிலேட்டினை வைத்துக்கொண்டாள்.
இதன்
பிறகு, கல்வி அதிகாரிகள் சமையலறை, கழிப்பறை மற்றும் பள்ளியின் சுற்றுப்புறங்களைப் பார்வையிட்டனர்.
கல்வி
அதிகாரிகள் பள்ளியைப்பார்வையிட்டுத் திரும்புகையில் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.அ.ஞானகவுரி
அம்மா அவர்கள் என்னை அருகில் அழைத்தார். தம்பி உங்க பெயர் என்ன? என்றார். என் பெயரைக்கூறியவுடன்,
“ரொம்ப நல்லா வேலை செய்யறீங்க தம்பி. இதே வேகமும்,
ஈடுபாடும் உங்கள் பணிக்காலம் முழுவதும் இப்படியே தொடர்ந்து நீடிக்க வாழ்த்துக்கள் தம்பி”
என்றார்கள்.
கல்வி
அதிகாரிகளின் வருகையால் புத்துணர்வும், வேகமும் கூடியுள்ள அதே நேரத்தில், தமிழில் பெயர்
எழுதும் போது முதல் எழுத்தையும் தமிழிலேயே எழுத முதல் வகுப்பிலிருந்தே பயிற்சியளிக்க
வேண்டும் என்று கவனிக்கப்படாமல் இருந்த கவனிக்கப்பட வேண்டிய இதுபோன்ற பகுதிகளின் பட்டியலினைத்
தயார் செய்ய வேண்டிய அவசியத்தினை தலைமையாசிரியை அவர்களும், நானும் உணர்ந்து கொண்டோம்.
கல்வி
அதிகாரிகளின் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் எங்களது தனிப்பட்ட முயற்சிகளால் மட்டுமே
கிட்டவில்லை. எங்கள் கிராம மக்களின் ஆதரவாலும், ஒத்துழைப்பாலும், ஆதரவு கரம் நீட்டும்
நன்கொடையாள நண்பர்களாலும், எங்களை வழிநடத்தும் அரசின் கல்வித்துறை அதிகாரிகளாலும் மட்டுமே
இவைகள் சாத்தியமாக்கப்படுகின்றன.
பதிவு : பிராங்கிளின்.
Subscribe to:
Posts (Atom)