கல்வி அதிகாரிகளின் பார்வை
28.12.2012 ஆம் நாள் இரவு
எங்கள் கோவை மாவட்டத்தின் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள், தொலைபேசியில் தொடர்பு
கொண்டு நாளை காலை காஞ்சிபுரம் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் உங்களது பள்ளிக்கு
வருகைதர உள்ளார்கள். தயாராக இருங்கள் எனத் தெரிவித்தார்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை
சார்பாக மாநில அளவிலான ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி கோவையில் நடைபெற்றது. அதில்
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளின் கல்வி அதிகாரிகள் வருகை புரிந்து மாணவர்களைப் பாராட்டினர்.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உயர்திரு.சாந்தி அவர்களும் கண்காட்சியைப் பார்வையிட்டபின், எங்கள்
பள்ளிக்கு வருகைபுரிந்தார். இவருடன் எங்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உயர்திரு.து.கணேசமூர்த்தி
அவர்களும் வருகை புரிந்திருந்தார்.
கோவையிலிருந்து சுமார் 35
கி.மீ தொலைவில் உள்ள நமது பள்ளிக்கு காலை 11 மணிக்கு வருகை புரிந்த கல்வி அதிகாரிகளை கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள், கிராம மக்கள், காரமடை ஒன்றிய உதவித்தொடக்கக்கல்வி
அலுவலர் திரு.சோ.குருசாமி மற்றும் தலைமையாசிரியை திருமதி.என்.சரஸ்வதி ஆகியோர் வரவேற்றனர்.
கோயம்புத்துார் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.கணேசமூர்த்தி அவர்களை வரவேற்கும் கிராமக்கல்விக்குழுவினர். |
தலைமையாசிரியை அவர்களைப்பாராட்டும் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.சாந்தி அவர்கள். |
பள்ளியின் அருகில் வசிக்கும்
சில மாணவர்கள் கணிப்பொறியில் கல்வி தொடர்பான குறுந்தகடுகளை இயக்கிக்கொண்டிருந்தனர்.அவர்களிடம்
சென்ற காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் சிறிது நேரம் உரையாடினார்.
எங்கள் மாணவர்களிடம் உரையாடும் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.சாந்தி அவர்கள். |
பின்னா் வகுப்பறையில் அமைக்கப்பட்டுள்ள
உள்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டார்.
கோவை மாட்ட ஆட்சித்தலைவர்
திரு.எம்.கருணாகரன் I.A.S அவர்கள் மூலம் வழங்கப்பட்ட நிதியில் மற்றொரு வகுப்பறையின் உள்கட்டமைப்பும்
மாற்றப்பட்டுள்ளது. அவ்வகுப்பறையையும் கல்வி அதிகாரிகள் பார்வையிட்டு, பின் புதிதாக
அமைக்கப்பட்டு வரும் கணினி ஆய்வுக்கூடம், பள்ளியின் சுற்றுப்புறம், கழிப்பறை முதலானவற்றினையும்
பார்வையிட்டனர்.
எங்கள் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஆகாஷிடம் நுாலகப்புத்தகங்கள் தொடர்ந்து வாசிக்கிறீர்களா? என வினவினார். மாணவன் ஆகாஷ், தொடர்ந்து வாசிக்கிறோம் என்றான். அடுக்கிவைத்திருந்த புத்தகங்களைக்காட்டி இதில் நீ படித்த புத்தகம் என்ன? என்றார் கல்வி அதிகாரி.புத்தகங்களைப் பார்த்தவாறே “ பொம்மை குதிரை” புத்தகம் வாசித்தேன் என்றான் மாணவன். அதில் என்ன கதை இருந்தது எனக் கேட்ட அதிகாரியிடம், முழுக்கதையின் சுருக்கத்தைச் சொல்லி பாராட்டைப் பெற்றான் மாணவன்.
கிராம மக்களின் கூட்டு முயற்சிக்கு,
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உயர்திரு.சாந்தி அவர்களும், கோவை மாவட்டத்
தொடக்கக் கல்வி அலுவலர் உயர்திரு.து.கணேசமூர்த்தி அவர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்துச்
சென்றனர்.